கேஸி என்ற அசுரன் பிரம்மனின் யாகத்தை அழித்து, தேவர்களை இம்ஸித்தான். அனைவரும் சென்று மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் கேஸியுடன் மல்யுத்தம் செய்து அவனை கீழேத் தள்ளி அவன்மீது அமர்ந்தார். இதைக் கண்ட கேஸியின் மனைவி கங்கையையும், தாமிரபரணியையும் பிரார்த்திக்க, வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. பகவான் உத்தரவுப்படி, பூமிதேவி பகவான் இருக்கும் இடத்தை சற்று மேடாக்கினாள். இதனால் பெருகி வந்த தண்ணீர் மேட்டைச் சுற்றி இரண்டாக பிரிந்து வட்டமாக ஓடியது. அதனால் 'திருவட்டாறு' என்று பெயர் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது. கேஸியை அழித்ததால் பெருமாளுக்கு 'ஆதிகேசவன்' என்ற திருநாமம் ஏற்பட்டது.
மூலவர் ஆதிகேசவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். வலக்கை யோக முத்திரையுடன் உள்ளது. மற்ற ஸ்தலங்கள் போல் இல்லாமல் பகவான் இங்கு வலமிருந்து இடமாக சேவை சாதிக்கிறார். தாயாருக்கு ஸ்ரீஹரிலட்சுமி என்பது திருநாமம். பரசுராமர் மற்றும் சந்திரனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயில் திருவனந்தபுரம் கோயிலைப் போலவே உள்ளது. இங்கும் பெருமாளை தரிசனம் செய்ய மூன்று வாசல்கள் உள்ளன. மாலை வேலைகளில் கர்ப்பக்ருஹத்தில் உள்ள மூலவர் திருமுகத்தில் சூரிய ஒளி விழுகிறது.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியயுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
|